மூன்றாம் உலகப் போர் தொடர்பிலான அச்சம் உலகின் பெரும்பாலான மக்களுக்கு உள்ளது. அத்தகைய ஒரு போர் உருவாகுமேயானால் மனித குலம் ஒட்டு மொத்தமாக அழிந்து போய்விடும் என்பதுவும் நிதர்சனமான உண்மை.
எனினும், மூன்றாம் உலகப் போரின் விளைவுகள் தொடர்பாக சாதாரண மக்களுக்கு உள்ள தெளிவு சில நாடுகளின் தலைவர்களுக்கு இல்லையோ என நினைக்கத் தூண்டும் அளவுக்கு உள்ளன அவர்கள் சிலரின் செயற்பாடுகள்.
இன்றைய உலகில் மிகப் பெரும் போர்களாக உக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பு, ஈரான்-–அமெரிக்க மோதல், இஸ்ரேல் மேற்கொண்டுவரும் பலஸ்தீனம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் மீதான தாக்குதல்கள் உள்ளிட்ட ஒரு சில உள்ளன.
இந்த மோதல்களில் ஈடுபட்டுள்ள ரஷ்யா, அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. ஆனால், தற்போதைய மோதல்களில் அவற்றைப் பயன்படுத்த அந்த நாடுகள் முயலவில்லை, முயலவும் மாட்டாது என எதிர்பார்க்கலாம்.
இன்றைய உலகில் அதிக அணு ஆயுதங்களைத் தன்னகத்தே கொண்ட ஒரு நாடாக ரஷ்யா விளங்குகிறது. உக்ரேன் போரை ரஷ்யா நான்கரை வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்த நாள் முதல், ஐரோப்பிய நாடுகள் மீது படையெடுக்கும் உத்தேசம் ரஷ்யாவுக்கு உள்ளது என்கின்ற ஒரு கதையாடல் ஐரோப்பிய நாடுகளின் அரசியல் உயர்மட்டங்களில் நிலவுவதை நாம் அறிவோம்.
நேட்டோ அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளிலும், ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளிலும் இந்த எதிரொலி அதிகமாக உள்ளது. ஐரோப்பிய நாடுகள் மீது படையெடுக்கும் உத்தேசம் எதுவும் தனக்கு இல்லை என ரஷ்யா மீண்டும் மீண்டும் உரக்கச் சொல்லி வந்தாலும் அதனைக் காதில் வாங்குவதற்கு அத்தகைய நாடுகளின் தலைவர்கள் தயாராக இல்லை.
அதேவேளை, ரஷ்ய அபாயம் என்ற ஒன்றைக் கட்டமைத்துள்ள அவர்கள், அதனை எதிர்கொள்ளும் நோக்குடன் படைக் கட்டுமானங்களை வலுப்படுத்துவதுடன், படைத் துறைக்கான செலவினங்களையும் அதிகரித்து வருகின்றனர்.
ரஷ்ய அபாயத்தை எதிர்கொள்ள சொந்த நாட்டைத் தயார்படுத்தி வரும் அவர்கள், ரஷ்ய எல்லையோரம் உள்ள நாடுகளில் படைகளைக் குவிப்பதிலும், கனரக ஆயுதங்களை நகர்த்துவதிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரு வகையில் அத்தகைய நாடுகளை ஒரு இடைத் தடுப்பு வலயமாக மாற்றியமைக்க அவர்கள் முயற்சித்து வருகின்றனர். ஒரு சில நாடுகளில் அவர்களின் முயற்சி வெற்றியளிக்கவும் செய்கிறது. அத்தகைய நாடுகளுள் ஒன்றாக முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான லித்துவேனியா உள்ளது.

1990களில் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சி கண்டபோது ஒன்றியத்தில் அங்கமாக இருந்த பல நாடுகள் சுதந்திர நாடுகளாக மாறின. சோவியத் ஒன்றியம் முடிவுக்கு வந்தபோது முன்னாள் ஒன்றிய நாடுகளை நேட்டோவில் சேர்த்துக் கொள்வதில்லை என்ற வாக்குறுதியை அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் வழங்கி இருந்தது.
வழக்கம் போல இந்த வாக்குறுதியையும் மேற்குலகம் காற்றில் பறக்கவிட்டது. இதன் விளைவாக ஐரோப்பிய ஒன்றியமும், நேட்டோவும் பொருளாதார உதவிகள் உள்ளிட்ட உதவிகளை வழங்கி முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளை தமது வசம் இழுக்கத் தொடங்கியதன் விளைவாக பிராந்தியத்தில் பல ஆயுத மோதல்கள் வெடித்தன.
மேற்குலகின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி தமது நாட்டையும், குடிமக்களையும் பணயம் வைக்கும் போக்கு அத்தகைய நாடுகளில் தொடரவே செய்கிறது.
அத்தகைய ஒரு விசப் பரீட்சையில், முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான லித்துவேனியாவும் உள்ளது. பேரழிவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்களைத் தனது மண்ணில் நிலைநிறுத்தும் வகையிலான ஒரு நகர்வில் அந்த நாடு தற்போது ஈடுபட்டு வருகின்றது.
இதுநாள் வரை அந்த நாட்டில் இருந்த சட்ட ரீதியிலான கடப்பாடு ஜூலை மாதத்துடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து தனது நிலைப்பாட்டை மாற்றும் வகையிலான அரசியலமைப்பு மாற்றம் ஒன்றைக் கொண்டு வருவதற்கான முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பில் பாராளுமன்றக் குழுவில் கடந்த வாரம் முன்வைக்கப்பட்ட ஒரு யோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே குறித்த யோசனைக்கு எதிர்ப்பை வெளியிட்டு உள்ளனர். குறித்த சட்டமூலம் பொதுமக்களின் வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடாக உள்ளது.
ஆனால், பாராளுமன்ற முடிவே போதுமானது என வாதிடுகிறார் நாட்டின் அதிபரான கிற்றானஸ் நவ்சேடா. எனினும், லித்துவேனிய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமானால் பாராளுமன்றத்தில் மூன்று மாத இடைவெளியில் இரண்டு வாக்கெடுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்ற விதி உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதனை அரசாங்கம் வெற்றிகரமாக நிறைவேற்றுமா என்பது பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டியுள்ளது. 29 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட சிறிய நாடான லித்துவேனியா பால்ரிக் நாடுகளுள் ஒன்று. லத்வியா, பெலாரஸ், போலந்து ஆகிய நாடுகளுடனும், ரஷ்யாவின் கலினின்கிராட் பிராந்தியத்துடனும் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் லித்துவேனியாவில் அணு ஆயுதங்கள் நிலைநிறுத்தப்படுமாக இருந்தால் அது தனது நாட்டுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பது ரஷ்யாவின் நிலைப்பாடு.

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள் தமது நடுநிலைமையைப் பேணும் வகையில் பேரழிவு ஆயுதங்களைத் தமது நாடுகளில் வைத்திருக்கக் கூடாது, வேறு நாடுகளின் படைத் தளங்களைத் தமது மண்ணில் அனுமதிக்கக் கூடாது என்ற விதி உள்ளது.
எனினும், லித்துவேனியா 2004ஆம் ஆண்டில் நேட்டோ அமைப்பில் இணைந்து கொண்டது. தற்போது அணு ஆயுதங்களைத் தனது மண்ணில் அனுமதிக்கத் தயாராகி வருகின்றது. மறுபுறம் தனது யுத்த தாங்கிப் படையணி ஒன்றை அந்த மண்ணில் நிலைநிறுத்த ஜேர்மனி முடிவு செய்துள்ளது.
மேற்படி நகர்வுகள் யாவும் ரஷ்யாவைக் குறிவைத்த நகர்வுகளே என்பது சிறு பிள்ளைக்குக் கூடப் புரியும். இருந்தும் லித்துவேனியா போன்ற நாடுகள் வல்லரசுகளின் சதுரங்க ஆட்டத்தில் பகடைக் காய்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.
அது பற்றி அந்த நாடுகளின் தலைவர்கள் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. தற்போதைய நிலையில் சொந்தமாக அணு ஆயுதங்களைக் கொண்ட ஒரேயொரு ஐரோப்பிய ஒன்றிய நாடாக பிரான்ஸ் உள்ளது.
லித்துவேனியா அனுமதி வழங்கினால் தனது அணு ஆயுதங்களுள் சிலவற்றை அந்த நாட்டுக்கு நகர்த்துவதற்கு பிரான்ஸ் தயாராக உள்ளது. அதேவேளை, அணு ஆயுதங்களைச் சொந்தமாகக் கொண்டிராத ஐரோப்பிய நாடுகளான துருக்கி, நெதர்லாந்து, பெல்ஜியம், இத்தாலி மற்றும் நெதர்லாந்து முதலான நாடுகளில் அமெரிக்கா தனது அணு ஆயுதங்களை ஏலவே நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பனிப் போர்க் காலத்தில் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக உருவாக்கப்பட்ட ஒரு படைக் கட்டமைப்பே நேட்டோ. பனிப் போர் முடிவுக்கு வந்த பின்னரும் அந்தக் கட்டமைப்பு தொடர்கிறது.
அந்தக் கட்டமைப்பு தற்காலத்தில் ரஷ்யாவை தனது எதிரி நாடாகப் பாவித்துச் செயற்பட்டு வருகின்றது. அதன் ஒரு அங்கமாகவே ரஷ்யாவின் எல்லையோர நாடுகளில் தனது கட்டமைப்பை விரிவாக்கி வருவதுடன், அவற்றை இடைத் தடுப்பு நாடுகளாகவும் உருவாக்கி வருகின்றன நேட்டோ நாடுகள்.
லித்துவேனியாவில் அணு ஆயுதங்கள் வைக்கப்படுமானால் அவை நிச்சயமாக மேற்குலகைக் குறி வைக்கப் போவதில்லை, மாறாக ரஷ்யாவையே குறி வைக்கப் போகின்றன.
அத்தகைய ஒரு சூழ்நிலையில் ரஷ்யாவும் பதிலுக்கு தனது அணு ஆயதங்களை லித்துவேனியாவை நோக்கி குறி வைக்க வேண்டிய சூழல் உருவாகும்.
அணு ஆயுதத் தாக்குதல் நடைபெறுவதான ஒரு போலியான சமிக்ஞை கூட ரஷ்யாவின் பதில் தாக்குதலை தானாகவே தொடக்கிவிடும் அபாயம் உள்ளது.
அதனை எதிர்கொள்ளும் திறன் உண்மையிலேயே லித்துவேனியாவுக்கு உள்ளதா என்பது மிகப் பாரிய கேள்வி. அணு ஆயுத மோதல் ஒன்று உருவானதன் பின்னர் அது உலகப் போராக உருவாகுவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன.
லித்துவேனியா மீதான பதில் தாக்குதலைத் தொடர்ந்து நேட்டோ நாடுகள் உதவிக்கு வருவதெல்லாம் பின்னர் நடக்கக் கூடிய விடயங்கள். அதற்கு முன்னர் லித்துவேனியா அழிந்து போகும் என்பதே சர்வ நிச்சயம்.
கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கும் வகையிலான இத்தகைய போக்கு நல்லதல்ல என லித்துவேனிய அரசியல் தலைமைக்குப் புரியும் வண்ணம் எடுத்துச் சொல்வது யார் என்பதே தற்போது உள்ள பெறுமதியான கேள்வி.
சுவிசிலிருந்து சண் தவராசா




