சமீபத்திய பதிவுகள்
பிரிட்டன் வனவிலங்கு பூங்காவில் அதிர்ச்சி சம்பவம்: கூண்டுக்குள் குதித்த நபரை கடித்துக் கொன்ற புலி..- வீடியோ  •  மெக்கா, மதீனாவை தவிர சவுதியில் உள்ள மற்ற அனைத்து விமான நிலையங்களுக்கும் குறி - ஹவுதிக்கள் எச்சரிக்கை  •  இறுதிப் போரில் விடு­தலைப் புலிகளின் விமானபடைக்கு எதிராக ஆயுதங்கள் வழங்கிய இந்­திய விமா­னப்­படை!!!!  •  சுற்­றி­வ­ளைக்­கப்­பட்ட ராஜபக்‌ஷ குடும்பம்  •  அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

ரணிலின் அழைப்பை நிராகரித்த சஜித்

ரணிலின் அழைப்பை நிராகரித்த சஜித்
இலங்கை அரசியல் அரங்கில் எதிர்பாராத திருப்பங்கள் நிகழ்வது புதிய விடயமல்ல. எனினும், கடந்த வாரத்தின் நடுப்பகுதியில் இடம்பெற்ற ஒரு நிகழ்வு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு சென்றது. இது சஜித் சற்றும் எதிர்பாராத ஒரு உரையாடலாகவே அமைந்தது.

தொலைபேசியில் உரையாடிய ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் 80வது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் (இன்று) ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதாகவும், அது மிகவும் விசேடமான ஒரு நிகழ்வு என்றும் குறிப்பிட்டார். அத்துடன், சிறிகொத்தாவில் அமைந்துள்ள மறைந்த தலைவர் ரணசிங்க பிரேமதாசவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து கௌரவிப்பதற்காக, அந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு சஜித்திற்கு அழைப்பு விடுத்தார்.

தனது தந்தையின் நினைவிடத்திற்குச் சென்று, சொந்தக் கட்சியின் தலைமையகமான சிறி கொத்தாவில் மாலை அணிவிப்பது சஜித்திற்கு கிடைத்த ஒரு மகத்தான வாய்ப்பாகும். 

ஆனால், இந்த அழைப்புக்கு பதிலளித்த சஜித் பிரேமதாச, அன்றைய தினம் தான் கொழும்புக்கு வெளியே செல்லவிருப்பதாகக் கூறி அழைப்பைத் தவிர்த்தார். அதற்குப் பதிலளித்த ரணில், ஒரு கடமையாகவே தான் இந்த அழைப்பை விடுத்ததாகக் கூறி உரையாடலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினார்.

தந்தையின் உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வை நிராகரித்த போதிலும், உரையாடல் இத்துடன் முடிவடையவில்லை. சஜித் உடனடியாக வேறு ஒரு விடயத்தைப் பற்றிப் பேசத் தொடங்கினார்.

 22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக, தொகுதி மட்டத்தில் மக்களை திரட்டி கொழும்பில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக ரணிலிடம் தெரிவித்தார். 

இதைக் கேட்ட ரணில் விக்கிரமசிங்க, அந்தப் போராட்டத்திற்குத் தேவையான உதவிகளையும் ஆதரவையும் வழங்கத் தயார் என்று உறுதியளித்தார். 

இந்த குறுகிய உரையாடல் நாட்டின் எதிர்கால அரசியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்த்துகிறது. தனிப்பட்ட உணர்வுகளைத் தாண்டி அரசியல் நிலைப்பாடுகளுக்கே சஜித் முன்னுரிமை அளித்துள்ளார் என்பதை இந்த நிகழ்வு காட்டுகிறது. அதேவேளை, அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான ஒரு புதிய பாதையை  ரணிலின் இந்த ஆதரவு வாக்குறுதி திறந்துவிட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டி உணவகத்தில் இரகசிய சந்திப்பு 


22வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை தொடங்கிய அதே நாளில், கொழும்பு அரசியலில் மற்றொரு முக்கிய பின்னணி நகர்வு அரங்கேறியது. அன்று இரவு, கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சில முக்கிய நபர்களைச் சந்தித்து கலந்துரையாடினார். 

இந்த விசேட சந்திப்பை அரசாங்க தகவல் தினைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக்க கருணாரத்ன மற்றும் ரணிலின் ஆட்சிக்கால ஊடகப் பணிப்பாளர் ஷhனுக கருணாரத்ன ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர்.

இந்த இரகசிய சந்திப்பில் பிரபல தொழிலதிபர் ஒருவர், செல்வாக்குமிக்க அரசியல்வாதி ஒருவர், ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளரான வருண ராஜபக்ஷ மற்றும் சமூக ஊடகங்களில் தீவிரமாகச் இயங்கி வரும் முக்கிய தளங்களின் பிரதானிகள் பலர் கலந்துகொண்டனர். 22வது திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் மீதான நீதிமன்ற விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த சூழலிலேயே இந்த சந்திப்பு திட்டமிட்டு நடத்தப்பட்டது.

சந்திப்பின் ஆரம்பத்திலேயே ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. கலந்துரையாடலில் பேசப்படும் அனைத்து விடயங்களையும் வெளியே கசிய விடாமல், தேவையான தகவல்களை மட்டுமே மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும், இரகசியமான விடயங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இதன்போது, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க தனது தெளிவான நிலைப்பாட்டை இதன் போது எடுத்துரைத்தார்.

மனுக்கள் மீதான விசாரணையின் முடிவில் நீதிமன்றம் சர்வஜன வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், வாக்கெடுப்பு  தேவையில்லை எனத் தீர்ப்பளித்தால் அதற்கேற்ப கையாளப்பட வேண்டிய மாற்று உத்திகள் குறித்தும் ரணில் விரிவாக விளக்கினார். 

இருவேறு சூழல்களையும் எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து இங்கு தெளிவான திட்டமிடல்கள் வகுக்கப்பட்டன. சமூக ஊடக செயல்பாட்டாளர்களும் இதில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். அதற்குப் பதிலளித்த ரணில், இந்தச் சூழலில் பின்பற்ற வேண்டிய ஊடக நடைமுறைகள் குறித்து அவர்களுக்கு தெளிவுபடுத்தினார்.

இது தொடர்பான ஊடகப் பணிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பை தினித் சிந்தக்க மற்றும் ஷhனுக கருணாரத்ன ஆகியோரிடம் ரணில் ஒப்படைத்தார். மேலும், மிக விரைவில் மீண்டும் ஒருமுறை இவ்வாறு சந்திக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக இரவு உணவருந்தியவாறே இந்த ஆலோசனைக் கூட்டம் நீடித்தது. இருப்பினும், அங்கு பேசப்பட்ட பெரும்பாலான இரகசிய விடயங்கள் எதுவும் வெளியுலகிற்கு கசியாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது.

எதிர்கால வியூகங்கள் பற்றிய கலந்துரையாடல்

அன்றைய இரகசிய சந்திப்பில், நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் எதிர்காலத்தில் உருவாகக்கூடிய புதிய அரசியல் மாற்றங்கள் குறித்து மிகவும் ஆழமாக விவாதிக்கப்பட்டது. 

குறிப்பாக, வரவிருக்கும் காலங்களில் எந்தெந்த அரசியல் சக்திகளுடன் இணைந்து பயணிப்பது மற்றும் எந்த மாதிரியான கூட்டணிகளை அமைப்பது என்பது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சமூக ஊடக பிரதானிகளுக்கும் இடையில் தீவிர கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. தற்போதைய கள நிலவரத்தின்படி, ஐக்கிய மக்கள் சக்தியுடன் மீண்டும் இணைவது குறித்து இன்னமும் பரிசீலிக்க வேண்டுமா அல்லது மாற்று வழிகளை ஆராய வேண்டுமா என்ற கேள்வியும் அங்கு முக்கிய விவாதப் பொருளாக உருவெடுத்தது.

இந்த விவாதத்தின் போது, நாட்டின் தற்போதைய அரசியல் கட்சிகளில் காணப்படும் தலைமுறை இடைவெளி குறித்து ரணில் சுட்டிக்காட்டினார். ஐக்கிய மக்கள் சக்தியிலும் சரி, ஐக்கிய தேசியக் கட்சியிலும் சரி, 40 வயதிற்கு மேற்பட்டவர்களே பெரும்பான்மையாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். 

அதேவேளை, தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த இளைஞர் அணிகள் தற்போது மெல்ல மெல்ல அந்த இயக்கத்தை விட்டு விலகி வருவதாகவும், அந்த இளைஞர்கள் நாமல் ராஜபக்ஷவை நோக்கிச் செல்வார்களா அல்லது அவர்களைத் நம்மிடம் தக்க வைத்துக் கொள்வதற்கான வலுவான வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டுமா என்பது குறித்தும் அங்கு விரிவாக ஆராயப்பட்டது. 

நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் ஏனைய பெரும்பாலான பிரதேசங்களின் தேர்தல் நடத்தை முறைகள் மற்றும் வாக்காளர்களின் மனநிலை குறித்து ரணில் விக்கிரமசிங்க மிக ஆழமான அரசியல் பகுப்பாய்வு ஒன்றை இதன்போது முன்வைத்தார். பிராந்திய ரீதியான வாக்களிப்பு முறைகள் மட்டுமன்றி, சமூகத்தின் சாதி அமைப்புகளை மையமாகக் கொண்டு வாக்காளர்கள் எவ்வாறு தீர்மானங்களை எடுக்கிறார்கள் என்பது பற்றியும், அதனை அரசியல் நகர்வுகளுக்கு எவ்வாறு சாதகமாகப் பயன்படுத்துவது என்பது பற்றியும் அங்கு விரிவாக பேசப்பட்டது.

ரவி கருணாநாயக்கவுக்காக விவகாரம் 

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகச் சென்ற முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, அது குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலவரத்தை விளக்கினார். 

ரவி எதிர்கொள்ளும் குற்றச்சாட்டுகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்த ரணில், உடனடியாக வஜிர அபேவர்தனவைத் தொடர்புகொண்டு, நீதிமன்றத்திற்குச் சென்று தேவைப்படும் அனைத்து சட்ட உதவிகளையும் ஒருங்கிணைக்குமாறு பணித்தார். அத்துடன் நின்றுவிடாமல், மூத்த சட்டத்தரணி தினேஷ் விதானபத்திரண உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவுடனும் ரணில் நேரடியாகப் பேசி, நீதிமன்ற நடவடிக்கைகளின் போது பின்பற்றப்பட வேண்டிய அவசியமான சட்ட வழிமுறைகள் குறித்து தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கினார்.

அச்சு ஊடகங்களின் எதிர்காலம் - ரணிலின் விளக்கம்  

இதேவேளை, ரணில் விக்கிரமசிங்க தமக்கு நெருக்கமான சில மூத்த ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது, நாட்டில் அச்சு ஊடகங்களின் தற்போதைய நிலைப்பாடு குறித்து மிக ஆழமான ஆய்வு ஒன்றை முன்வைத்தார். 

'இங்கிலாந்தில் மக்கள் வேலைக்குச் செல்லும்போதும் திரும்பும்போதும் செய்தித்தாள்களையோ அல்லது யூடியூப் தளங்களையோ தொடர்ந்து வாசிக்கிறார்கள். ஆனால், நமது நாட்டு மக்கள் ஏன் இப்போது செய்தித்தாள்களை வாசிப்பதில்லை? ஒரு காலத்தில் பத்திரிகைகளைத் தேடிப் படித்த மக்கள், இப்போது ஏன் அதனைத் தவிர்க்கிறார்கள்? இது மக்களின் பழக்கவழக்கத்தில் ஏற்பட்ட மாற்றமா அல்லது பத்திரிகைகள் தங்களின் உள்ளடக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய நேரமா?' என்ற கேள்விகளை அவர் எழுப்பினார். 

அச்சு ஊடக உரிமையாளர்கள் இக்கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறிந்து, காலத்திற்கு ஏற்ப மாற்றங்களைச் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார். 

இது தொடர்பாக முக்கிய ஊடக நிறுவன உரிமையாளர் ஒருவருடனும் ரணில் கடந்த வாரம் விரிவான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அச்சு ஊடகங்களில் இடம்பெறும் கட்டுரைகளின் தன்மை குறித்துப் பேசிய ரணில், 'உதாரணமாக, பத்திரிகைகளின் நடுப்பக்கக் கட்டுரைகளைப் பாருங்கள். சில பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மிகவும் சிக்கலான, சாதாரண மக்களுக்குப் புரியாத கலைச்சொற்களைப் பயன்படுத்தி எழுதுகிறார்கள். இதனால் சாதாரண வாசகர்களுக்கு எதுவும் புரிவதில்லை.

 இந்த யதார்த்தத்தை பத்திரிகைகள் ஏன் புரிந்து கொள்வதில்லை?' என்று விசனம் தெரிவித்தார். அத்துடன், அச்சு ஊடகங்களை டிஜிட்டல்மயமாக்குவதன் அவசியம் குறித்தும் அவர் விரிவாக விளக்கினார். இது தொடர்பாக வார இறுதிப் பத்திரிகை ஒன்றின் ஆசிரியருடன் விசேட சந்திப்பு ஒன்றிற்கும் ரணில் திட்டமிட்டுள்ளார்.

ஊடகத் துறையின் வீழ்ச்சிக்கு முதன்மைக்காரணத்தைக் குறிப்பிட்ட ரணில், நெற்றியைச் சுருக்கியவாறு, 'உண்மையில், இன்று பெரும்பாலான ஊடக நிறுவன உரிமையாளர்களிடம் அரசியல் எழுத்தறிவு (Political Literacy) மிகக் குறைவாக இருப்பதே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூல காரணம்' என்று கூறினார். 

ஜீ.எல். பீரிஸின் வீட்டில் கூட்டு எதிர்க்கட்சி தலைவர்கள் 

கூட்டு எதிர்க்கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்ற வார இறுதி ஆலோசனைக் கூட்டம், பேராசிரியர் ஜி.எல். பீரிஸின் இல்லத்தில் நடைபெற்றது. 

இந்தச் சந்திப்பில், 22வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சி முன்னெடுக்கவுள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு மிகத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் தெளிவுபடுத்த வேண்டும் என்பதில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒருமித்த கருத்தை வெளியிட்டனர். இதன்போது கருத்துத் தெரிவித்த ஜி.எல். பீரிஸ், மனுதாரர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஒரு கூட்டு மனு மூலமாக மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்கள்.

அதில் முதலாவதாக, தற்போதைய தலைமை நீதியரசருக்கு இந்த விவகாரத்தில் நேரடித் தொடர்பு அல்லது பிணைப்பு இருப்பதால், அவர் இந்த வழக்கை விசாரணை செய்யும் அமர்வில் இடம்பெறக் கூடாது என்பதாகும். 

இரண்டாவதாக, அவரைத் தவிர்த்து உச்சநீதிமன்றத்தின் ஏனைய 13 நீதிபதிகளும் உள்ளடங்கிய முழுமையான நீதிபதிகள் அமர்வு மூலமே இந்த மனுக்கள் விசாரிக்கப்பட வேண்டும். மூன்றாவதாக, இந்த வழக்குக்கான நீதிபதிகள் அமர்வைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை தலைமை நீதியரசர் தனித்து தீர்மானிக்காமல், உச்சநீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளும் கூட்டாகவே தீர்மானிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது

தொடர்ந்து பேசிய பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், அரசாங்கம் தற்போது முன்னெடுக்கும் இந்த நகர்வுகளால் உச்சநீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை மற்றும் நடுநிலைமை குறித்து மக்கள் மத்தியில் கடுமையான சந்தேகங்களும் கேள்விகளும் எழும் அபாயம் உள்ளதாக எச்சரித்தார். 

எனவே, இந்தத் திருத்தத்தினால் நீதித்துறைக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து நாட்டிற்கு மிகத் தெளிவாக சுட்டிக்காட்டப்பட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், எந்த நீதிபதிகள் நடுநிலையானவர்கள், எவர் பக்கச்சார்பானவர்கள் என்ற குழப்பமான சூழலையே இது தோற்றுவிக்கும் என அவர் சுட்டிக்காட்டினார். 

 அத்துடன், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதன் மூலம் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் தாமதத்திற்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார். 

ஓய்வுபெறும் வயதை நீடிப்பதால் மட்டும் நீதிபதிகளால் நடப்பு ஆண்டை விட அடுத்த ஆண்டில் இரட்டிப்பு மடங்கு வழக்குகளை விசாரித்து முடிக்க முடியாது.

 நாட்டிலுள்ள நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே சட்டத்தின் தாமதத்திற்கு உண்மையான தீர்வாக அமையும். மேலும், சட்டமா அதிபர் திணைக்களம், அரசு பகுப்பாய்வாளர் திணைக்களம் மற்றும் சட்ட வரைஞர் திணைக்களம் ஆகிய கட்டமைப்புகளில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யாமல், நீதிபதிகளின் ஓய்வு வயதை மட்டும் உயர்த்துவதால் எந்தவொரு அடிப்படைப் பிரச்சினையும் தீரப்போவதில்லை என்றார்.  

தொழிற்சங்கங்களின் ஆதரவு 

மிகப்பெரிய அளவில் பொதுமக்கள் பங்கேற்புடன் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட கூட்டு எதிர்க்கட்சியின் காலி மாநாட்டிலும் இந்த விவகாரங்கள் குறித்து மிக ஆழமாக விவாதிக்கப்பட்டதாகக் கூட்டத்தில் நினைவுகூரப்பட்டது. மேலும், நாட்டின் அனைத்துத் துறை சார்ந்த தொழிற்சங்கங்களையும் ஒருங்கிணைத்து, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு தங்களின் முழுமையான ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் கூட்டு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடவும் அனைத்துக் தலைவர்களும் சம்மதம் தெரிவித்தனர்.  

இதேவேளை, ஜி.எல். பீரிஸின் வீட்டில் எதிர்க்கட்சித் தலைவர்கள் அடிக்கடி சந்திப்பது குறித்து அரசாங்கத் தரப்பைச் சேர்ந்த நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்ட விமர்சனத்திற்கு, பாடலி சம்பிக்க ரணவக தகுந்த பதிலடியைக் கொடுத்திருந்தார். 'கொழும்பு 7 பகுதியில் கூட்டங்களை நடத்துவதற்கு எங்களிடம் பிரம்மாண்டமான மாளிகைகள் எதுவும் இல்லை. அதேநேரத்தில், எங்களை நாட்டின் முதன்மை எதிர்க்கட்சியாக அவர்கள் அங்கீகரித்து ஏற்றுக்கொண்டதற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்' என சம்பிக்க மிகச் சாதுரியமாகப் பதிலளித்திருந்தார். 

 இறுதியாக, 22வது திருத்தத்தின் ஆபத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இப்போராட்டங்களுக்கான மக்கள் பலத்தையும் ஆட்களையும் முழுமையாகத் திரட்டி வழங்குவதற்கு சாகல ரத்நாயக்க சம்மதம் தெரிவித்தார். நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் அரசின் முயற்சியை எதிர்த்து சட்டத்தரணிகள் சங்கம் பாரிய அளவில் போராடி வருவதால், எதிர்க்கட்சியாக அவர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டியது எமது கடமையாகும் என ஜி.எல். பீரிஸ் வலியுறுத்தினார்.  
பகிரவும்:

கருத்துக்கள் (0)

இதுவரை கருத்துக்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்