சமீபத்திய பதிவுகள்
பிரிட்டன் வனவிலங்கு பூங்காவில் அதிர்ச்சி சம்பவம்: கூண்டுக்குள் குதித்த நபரை கடித்துக் கொன்ற புலி..- வீடியோ  •  மெக்கா, மதீனாவை தவிர சவுதியில் உள்ள மற்ற அனைத்து விமான நிலையங்களுக்கும் குறி - ஹவுதிக்கள் எச்சரிக்கை  •  இறுதிப் போரில் விடு­தலைப் புலிகளின் விமானபடைக்கு எதிராக ஆயுதங்கள் வழங்கிய இந்­திய விமா­னப்­படை!!!!  •  சுற்­றி­வ­ளைக்­கப்­பட்ட ராஜபக்‌ஷ குடும்பம்  •  அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

இரண்டு மெகா திட்டம்.. கூட்டணி அமைத்த ஏமன், சவூதி.. தப்பிக்குமா ஹவுதி?

இரண்டு மெகா திட்டம்.. கூட்டணி அமைத்த ஏமன், சவூதி.. தப்பிக்குமா ஹவுதி?

ஏமனின் சில பகுதிகளில் மீண்டும் தொடங்கிய மோதல்களால் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

சவூதி அரேபியாவும் அதன் கூட்டாளியான ஏமனும் அரசாங்கத்தை மீட்டெடுக்கவும், ஹவுதிகளின் அதிகாரத்தைப் பலப்படுத்துவதைத் தடுக்கவும் இரண்டு மெகா திட்டங்களை வகுத்துள்ளன. 

அதன்படி, சவூதி அரேபியா வான்வழித் தாக்குதலுக்குத் தலைமை தாங்குவதாகவும், ஏமன் படைகள் தரைவழி நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. அதேநேரத்தில், இந்த தாக்குதலால் ஏமனில் நான்கு குடும்பங்களில் மூன்று குடும்பங்கள் பட்டினியால் வாடுவதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

ஏமனில் உள்நாட்டுப் போர் என்பது பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. ஈரான் ஆதரவு ஹவுதி படைகளுக்கும் ஏமன் அரசு ராணுவத்திற்கும் இடையே சண்டை தொடர்ந்தது. இடையில் 2022ஆம் ஆண்டு போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஆனால், தற்போது அது மேலும் தீவிரமடைந்துள்ளது. 

ஏமனில் ஒரு பகுதியில் இருக்கும் ஹவுதி அமைப்பினர், அந்நாட்டில் உள்ள பிற பகுதிகளைக் கைப்பற்றும் நோக்கில் தற்போது அதிரடித் தாக்குதல்களைத் தொடர்ந்து வருகின்றனர்.

இந்த மாத தொடக்கத்தில், ஹவுதிகள் ஏமன் கடற்கரையோரமாக முன்னேறி, முக்கிய துறைமுக நகரமான மோக்காவையும், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த செங்கடல் தீவுகளையும் கைப்பற்றினர். 


இந்த வெற்றி, அவர்களுக்கு உலகின் வர்த்தகத்தில் சுமார் 12 சதவீதம் வழக்கமாக கடந்து செல்லும் பாப் அல்-மண்டேப் ஜலசந்தியில் உள்ள கப்பல்களைக் கண்காணிக்கும் வகையில் உள்ளது. இதைவைத்து அவர்கள் மிரட்டலும் விடுத்துவருகின்றனர். 

இதனால், சவூதி அரேபியாவின் எண்ணெய் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் தாக்குதலால் பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள், முதியோர்கள் எனக் கடுமையான மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சவூதி ஆதரவு பெற்ற ஏமன் அரசாங்கம், இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றுவதற்கும் அரசின் கட்டுப்பாட்டை மீட்டெடுப்பதற்கும் ஒரு பெரிய எதிர்த்தாக்குதலை அறிவித்துள்ளது. 

இதற்காக, சவூதி அரேபியா மற்றும் அதன் ஏமன் கூட்டாளிகள் எதிர் தாக்குதலுக்காக பல வாரங்களாக மேற்கொண்ட தயாரிப்புகளைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சவூதி அரேபியா வான்வழித் தாக்குதலுக்குத் தலைமை தாங்குவதாகவும், ஏமன் படைகள் ஹவுதிகளுக்கு எதிராக தரைவழி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என இரண்டு அரசுகளும் ஒரேநேரத்தில் தாக்கும் இரண்டு மெகா திட்டங்களை வகுத்துள்ளன.


அதன்படி, ஏமன் தலைநகர் சனா மற்றும் சாடா பகுதியில் அமைந்துள்ள ஹவுதிகளின் முக்கிய கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் ஏவுகணைத் தளங்கள் மீது சவூதி கூட்டுப் படைகள் தீவிர வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. மறுபுறம், ஏமன் அரசின் 'ஜனாதிபதி தலைமை மன்றம்' (PLC) படைகள், தாயிஸ் மற்றும் அல்-ஜவ்ஃப் மாவட்டங்களில் ஹவுதிகளுக்கு எதிராகப் பெரும் தரைவழி எதிர்த்தாக்குதலைத் தொடங்கியுள்ளன.

இதற்கிடையே, கடந்த 48 மணி நேரத்தில், ஹவுதிப் படைகள் தைஸ் நகருக்கு அருகிலுள்ள முக்கியத்துவம் வாய்ந்த மலை உச்சிகளைக் கைப்பற்றியுள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அவர்களின் இந்த முன்னேற்றம், ஏமன் அரசாங்கம் அமைந்துள்ள ஏடன் நகரை தைஸ் நகருடன் இணைக்கும் கடைசி முக்கிய சாலைக்கு அச்சுறுத்தலாக உள்ளது. ஹவுதிகள் அந்தப் பாதையைத் துண்டிப்பதில் வெற்றி பெற்றால், தைஸ் நகரம் முற்றுகைக்கு உள்ளாக நேரிடலாம்.


காரணம், இது ஏமனின் மூன்றாவது பெரிய நகரமாகும். மேலும், ஏடனுக்குச் செல்லும் அதன் முக்கியப் பாதையை ஹவுதிகள் துண்டிக்கும்பட்சத்தில், அது, அரசாங்கப் படைகளைத் தனிமைப்படுத்த நேரிடும். இது ஒருபுறமிருக்க, மறுபுறம் ஏமனின் சில பகுதிகளில் மீண்டும் தொடங்கிய மோதல்களால் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். இதன் காரணமாக, நான்கு குடும்பங்களில் மூன்று குடும்பங்கள் பட்டினியால் வாடுவதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

பகிரவும்:

கருத்துக்கள் (0)

இதுவரை கருத்துக்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்